EBM News Tamil
Leading News Portal in Tamil

விராட் கோலியிடம் ஆட்ட நடுவர் ஜெஃப் குரோவ் பேசியது என்ன?- இங்கி.வட்டாரங்களில் சலசலப்பு

இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆட்ட நடுவரிடம் பேசியது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டை நேராக ஸ்டம்பிற்குத் த்ரோ செய்து ரன் அவுட் செய்து அதை விராட் கோலி கொண்டாடிய போது கொஞ்சம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது குறித்து ஜெஃப் குரோவ், விராட் கோலியை அழைத்து கேப்டனாக பொறுப்புகள், நடத்தைகள் எப்படியிருக்க வேண்டும் என்று அளவளாவியதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது ஒருநாள் தொடரை இங்கிலாந்து வெல்லும் போது சதமடித்த ஜோ ரூட் எப்படி கொண்டாடினாரோ அதை அப்படியே போல்செய்து காட்டி விராட் கோலி கொண்டாடியதோடு சில வார்த்தைகளையும் பிரயோகித்தார்.
இது அப்போது யாராலும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை, இருப்பினும் ஒரு நல்ல டெஸ்ட் தொடர் தேவையற்ற சர்ச்சைகளினால் திசைமாற வேண்டாம் என்று ஜெஃப் குரோவ் கோலியிடம் அறுவுறுத்தியதாகத் தெரிகிறது.
ஆனால் ஜெஃப் குரோவ், விராட் கோலியிடம் பேசியதுமே தேவையற்றது என்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் ஆர்த்தர்டன், “இது எனக்கு எரிச்சலாக இருக்கிறது, கவலைப்பட வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.
2 நாட்கள் மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் நாட்கள். பேட்ஸ்மென் முகத்துக்கு நேராக வந்து வசைபாடவில்லையே. கோலி இயல்பாக செய்த செயல் அது. இதனைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை” என்கிறார் ஆர்த்தர்டன்.