EBM News Tamil
Leading News Portal in Tamil

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி காந்த் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான பிரணாய் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஸ்பெயினின் பேப்லோ அபியனை எதிர்த்து விளையாடினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-15, 12-21, 21-14 என்ற செட்கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் ஸ்ரீகாந்த், மலேசியாவின் டேரன் லிவ்வை எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரணாய் 21-8, 16-21, 15-21 என்ற செட் கணக்கில் போராடி பிரேசிலின் யகோர் கோயல்ஹோவிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் சுமார் 55 நிமிடங்கள் நடைபெற்றது. மற்றொரு இந்திய வீரரான சாய் பிரணீத் 21-18, 21-11 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் லூயிஸ் என்ரிக் பெனால்வரை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 18-21, 21-15, 16-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கிம் அஸ்டிரப், ரஸ்முசென் ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 24-22, 13-21, 16-21 என்ற செட் கணக்கில் 61 நிமிடங்கள் போராடி ஜப்பானின் தகுடோ இனோயி, யுகி கனேகோ ஜோடியிடம் வீழ்ந்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்கிய 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் பிட்ரியானியை எதிர்த்து விளையாடினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவடைந்தது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 14-21, 15-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் யுகி புகுஷிமா, சயகா ஹிரோடா ஜோடியிடம் தோல்வி கண்டது.