Ultimate magazine theme for WordPress.

பனாமாவை பந்தாடியது பெல்ஜியம்: 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள அறிமுக அணியான பனாமாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம் அணி.
ரஷ்யாவின் சோச்சியில் உள்ள ஒலிம்பிக் பிஷ்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 3-4-2-1 என்ற பார்மட்டிலும், அறிமுக அணியான பனாமா 4-5-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. முதல் நிமிடத்திலேயே பனாமாவின் பாக்ஸ் பகுதிக்குள் நுழைந்த பெல்ஜியம் வீரர் ரோமுலு லுகாகு மிக நெருக்கமாக சென்று இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாக சென்று ஏமாற்றம் அளித்தது. 4-வது நிமிடத்தில் பனாமா வீரர் எட்கர் பார்செனாஸ், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து உதைத்த பந்து கோல்கம்பத்துக்கு இடது புறம் விலகிச் சென்றது.
6-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு கோல் அடிக்க அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. பாக்ஸ் பகுதிக்குள் இருந்து யானிக் காரஸ்கோ அடித்த வலுவில்லாத ஷாட் நேராக பனாமா கோல்கீப்பரின் கையில் தஞ்சம் அடைந்தது. அடுத்த நிமிடத்தில் டிரைஸ் மெர்டன்ஸ் அடித்த வலுவான ஷாட்டை பனாமா கோல்கீப்பர் ஜெமி பெனேடோ, டைவ் அடித்தபடி கோல்கம்பத்துக்கு மேல தட்டிவிட்டார். 11-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஈடன் ஹஸார்டு மிக நெருக்கமாக கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 18-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து பந்தை பெற்ற டிரைஸ் மெர்டென்ஸ் விரைவாக பாக்ஸ் பகுதிக்குள் நுழைந்து பந்தை வேகமாக இலக்கை நோக்கி உதைத்தார். ஆனால் பந்து கோல்கம்பத்தின் பக்கவாட்டை நோக்கி சென்று ஏமாற்றம் அளித்தது. 38-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்குள் இருந்து ஈடன் ஹஸார்டு இலக்கை நோக்கி அடித்த பந்தை பனாமா கோல்கீப்பர் ஜெமி பெனேடோ இடது புறமாக பாய்ந்து அற்புதமாக தடுத்தார். முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 47-வது நிமிடத்தில் பெல்ஜியம் முதல் கோலை அடித்தது. பாக்ஸின் வலது புறத்தில் இருந்து டிரைஸ் மெர்டென்ஸ் அடித்த பந்து கோல்கம்பத்தின் இடது ஓரத்தின் வழியாக வலையை துளைத்தது. இதனால் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.
54-வது நிமிடத்தில் பனாமா வீரர் மைக்கேல் முரிலோவின் கோல் அடிக்கும் முயற்சியை பெல்ஜியம் கோல்கீப்பர் திபட் கோர்டோஸ் அற்புதமாக தடுத்தார். 69-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி 2-வது கோலை அடித்தது. பாக்ஸ் பகுதிக்கு வெளியே இடது புறத்தில் பந்தை சேகரித்த கெவின் டி புரூனே அதை லாவகமாக பனாமா அணி டிபன்டர்களின் ஊடாக ரோமுலு லகாகுவுக்கு பாஸ் செய்தார். 6 அடி தூரத்தில் இலக்குக்கு மிக நெருக்கமாக இருந்த அவர், பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் பெல்ஜியம் 2-0 என முன்னிலை பெற்றது.
75-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது. ஈடன் ஹஸார்டிடம் இருந்து பாஸை பெற்ற ரோமுலு லகாகு, எதிரணியின் தடுப்புகளை மீறி வேகமாக முன்னேறிச் சென்று கோல்கீப்பர் ஜெமி பெனேடோவுக்கு போக்கு காட்டி மீண்டும் ஒரு அற்புதமான கோலை அடித்தார். கடைசி வரை முயற்சித்தும் பனாமா அணியால் ஒரு முறை கூட கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் தனது அடுத்த ஆட்டத்தில் 23-ம் தேதி துனீசியாவுடன் மோதுகிறது.
சுவீடன் வெற்றி
நிஸ்னி நோவ்கோரோட் மைதானத்தில் எஃப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவீடன் – தென் கொரியா மோதின. இதில் 65-வது நிமிடத்தில் வீடியோ அசிஸ்டன்ட் ரெப்ரீ தொழில்நுட்ப உதவியுடன் பெனால்டி கிக் வாய்ப்பை சுவீடன் அணி பெற்றது. இதை பயன்படுத்தி கேப்டன் கிரான்க்விஸ்ட், தென் கொரியா கோல்கீப்பரை லாவகமாக ஏமாற்றி கோல் அடித்தார். இந்த கோலால் சுவீடன் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன் அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக அந்த அணி 1958-ம் ஆண்டு உலகக் கோப்பையில் மெக்சிகோ அணியை வென்றிருந்தது. அதன் பின்னர் 7 தொடக்க ஆட்டங்களில் அந்த அணி வெற்றியை ருசிக்க வில்லை.

Leave A Reply

Your email address will not be published.