கிடைக்குமா ‘டாப்–10’: சுனில் செத்ரி எதிர்பார்ப்பு
மும்பை: ‘‘ஆசிய அளவில் சிறந்த கால்பந்து அணிகளில் இந்திய ‘டாப்–10’ பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே அடுத்த இலக்கு,’’ என சுனில் செத்ரி தெரிவித்தார்.
ஆசிய கோப்பை (2019, யு.ஏ.இ.,) தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி ‘கான்டினென்டல்’ கோப்பை தொடரில் பங்கேற்றது. நான்கு நாடுகள் களமிறங்கிய இத்தொடரின் பைனலில் இந்தியா, கென்யாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
கேப்டன் சுனில் செத்ரி, 33, கூறியது:
பைனலில் ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தால் அணியில் ஆறு அல்லது ஏழு மாற்றங்கள் செய்திருப்போம். இதனால் முதலில் களமிறங்கும் 11 வீரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது சிரமம் ஆக இருக்கும். அணியில் ஓரிரு மாற்றங்கள் எனில் எவ்வித சிக்கலும் இல்லை. ஏனெனில் மாற்று வீரராக உள்ள சலாம் ரஞ்சன் உள்ளிட்டோர் இளம் வீரர்கள். போதிய அனுபவம் இல்லை. அதிக போட்டிகள் விளையாடும் பட்சத்தில் சிறந்த வீரராக உருவாகலாம்.
மற்றபடி பயிற்சியாளர் கான்ஸ்டன்டைன் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் அன்னிய மண்ணிலும் இதே போன்று திறமை வெளிப்படுத்த வேண்டும். ஆசிய கோப்பை தொடருக்கு முன் கடினமான அணிகளுக்கு எதிராக அவர்களது சொந்தமண்ணில் விளையாட வேண்டும்.
ஏனெனில் இந்திய அணி தரவரிசையில் 97 வது இடத்தில் உள்ளது. இதனால் உள்ளூரில் நன்கு செயல்பட்டாலும் சிறந்த அணிகளை சொந்தமண்ணுக்கு அழைத்து வந்து விளையாட முடியாது. அதேநேரம் அன்னிய மண்ணில் விளையாடுவது நமது திறமையை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் ஆசிய அளவில் சிறந்த அணிகளுக்கான பட்டியலில் இந்தியா ‘டாப்–10’ பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும். இது அவ்வளவு எளிதல்ல என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனெனில் ஈரான், சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா என நம்மை விட அசத்தலாக செயல்படும் அணிகள் உள்ளன.
இவ்வாறு சுனில் செத்ரி கூறினார்.