EBM News Tamil
Leading News Portal in Tamil

371 ரன்கள் குவித்து நெ.1 அணியான இங்கிலாந்தை வீழ்த்திய ஸ்காட்லாந்து!

ஸ்காட்லாந்து 371 for 5 (மெக்லியோட் 140*, கூட்ஸெர் 58 முன்சே 55), இங்கிலாந்து 365 (பேர்ஸ்டோவ் 105, ஹேல்ஸ் 52, வாட் 3-55).

இது யாருமே எதிர்பார்க்காத ஒரு வெற்றி. 

உலகின் நெ.1 ஒருநாள் அணியான இங்கிலாந்தைத் தோற்கடித்துள்ளது ஸ்காட்லாந்து. இத்தனைக்கும் இந்த அணி அடுத்த வருட உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை.

எடின்பர்க்கில் நடைபெற்ற ஒரே ஒரு ஒருநாள் ஆட்டம்கொண்ட தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், எதிர்பாராத வகையில் இங்கிலாந்து பந்துவீச்சை ஸ்காட்லாந்து வீரர்கள் சுலபமாக எதிர்கொண்டார்கள். தொடக்க வீரர்கள் 103 ரன்கள் வரை ஆட்டமிழக்கவில்லை. இந்த அடித்தளம் அடுத்து வந்த வீரர்களுக்குப் புதுத் தெம்பை வரவழைத்தது. கேலும் மெக்லியோட் 94 பந்துகளில் 3 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் எடுத்து அசத்தினார். முன்சே கடைசிக்கட்டத்தில் 51 ரன்கள் எடுத்தார். 5 வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது ஸ்காட்லாந்து. ஐந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் மோசமாகப் பந்துவீசினார்கள். அனைவருமே 10 ஓவர்களுக்கு 65 ரன்களுக்கு மேல் கொடுத்தார்கள். 

பேட்டிங்குக்குச் சாதகமான பிட்ச் என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடினார்கள். பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி, 59 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்தார். ரூட் 52 ரன்கள் எடுத்தார். இதர வீரர்களும் சிறப்பாக விளையாடினாலும் யாராலும் அரை சதம் எடுக்கமுடியாமல் போனது. இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் வென்றது.