தென்னை மரங்களை அழிக்கும் ரூகோஸ் வெள்ளை பூச்சிகள்: வேதனையில் விவசாயிகள்..!
கொரோனா வைரஸைப் போலவே தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை பூச்சிகள் பரவி வருகின்றன. இதனால் தென்னையின் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறனர்.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள தென்னை தோப்பில் உள்ள மரத்தில் ரூகோஸ் வெள்ளை பூச்சிகள் கூட்டம் புகுந்து தென்னை மரங்கள் அடியோடு அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
அண்மைக்காலமாக தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்னும் பூச்சியின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவை தென்காசி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் காணப்படுகிறது.
தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைப் போல பல லட்சம் மதிப்பில் உள்ள தென்னை தோப்புகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைந்து வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளை ஈக்களானது, தென்னை மரங்களைத் தவிர, வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.