1000 யூனிட்டுகளுக்கான மின் கட்டணத்தை ரத்து செய்க – அன்புமணி
மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு மாதத்திற்கு 500 யூனிட் வீதம் 2 மாதத்திற்கு 1000 யூனிட்டிற்கான மின்கட்டணத்தை ரத்து செய்யுமாறு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாட்டில் 1,200-க்கும் மேற்பட்டோரை தாக்கியிருப்பது ஒருபுறமிருக்க, பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தையும் பறித்திருக்கிறது. அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் குறித்த அச்சமும், கரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 90% மக்களின் வாழ்வாதாரங்களை பறித்திருக்கின்றன. அரசு ஊழியர்கள், அமைப்பு சார்ந்த பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் தான் ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஊரடங்கு காரணமாக வீடுகளுக்குள் மக்கள் அடைந்து கிடப்பதால், மின்சாரப் பயன்பாடு கணிசமாக அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 90% மக்களுக்கு எந்த வருமானமும் இல்லாத நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களால் மின்கட்டணத்தை எவ்வாறு செலுத்த முடியும்? என அரசு சிந்திக்க வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.