ஊரடங்கு நீட்டிப்பா… தளர்வா…? ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவு என்ன…?
கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் உடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில், சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளன.
கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள 40 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு இன்னும்6 நாட்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஏற்கனவே, மார்ச் 20, ஏப்ரல் 2 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பிரதமர், அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று நான்காவது முறையாக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்ககளின் நிலைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஊரடங்கிற்குப் பிறகு எப்படி, கட்டுப்பாடுகளை தளர்த்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல மாநிலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவதாக அறிக்கைகள் வருகின்றன. மிக கண்டிப்புடன் கட்டுப்பாடுகளை அமல்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில், 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர். இதனால், கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, அம்மாநில தலைமை செயலாளர் பங்கேற்றார்.ஊரடங்கை மே 16-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் ஆகிய 5 மாநிலங்கள் ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில், இன்றூ நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களும் இதை வலியுறுத்தின.
எனினும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கச் செய்து, மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்று பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், இது தொடர்பான அறிவிப்பு மே- 3 அல்லது அதற்குப் பின்னர் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த திட்டங்களை வகுக்கவும் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களிடம் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.