கொரோனாவுக்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது – பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாகவும், இதில் ஒவ்வொரு இந்தியரும் போர்வீரராக திகழ்வதாகவும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் பேசும், மனதின் குரல் எனப்படும் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அப்போது, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம், மக்களும் அரசு நிர்வாகமும் இணைந்து நடத்துவதாக உள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு இந்தியரும் போர் வீரரே என்றும் அவர் கூறினார்.
நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவரது திறனுக்கு ஏற்றவாறு கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்று உள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா போர்வீரர்களுக்கான இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டு அனைத்து தரப்பினருக்குமான பணிகள் ஒருங்கிணைக்கப்படுவதாகவும், அதில் இதுவரை தன்னார்வலர்கள், மருத்துவத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என ஒன்றே கால் கோடி பேர் இணைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் இந்த இணையதளத்தில் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பொது இடங்களில் எச்சில் துப்புவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் பொது இடங்களில் எச்சில் துப்பும் வழக்கம் முழுமையாக மறைய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
மத்திய அரசும் மாநில அரசுகளும், பிற துறைகளும் ஒன்றிணைந்து முழு வேகத்துடன் கொரோனாவுக்கு எதிராக போரிட்டு வருவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். முகக்கவசம் அணிவோர் அனைவரும் நோயாளிகள் அல்ல என்றும், முகக்கவசம் நாகரீக சமூகத்தின் அடையாளமாக உள்ளதாகவும் பிரதமர் கூறினார். கொரோனாவிடம் இருந்து தற்காத்து கொள்ளவும், பிறருக்கு பரவாமல் தடுக்கவும் விரும்பினால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அவர் கூறினார்.மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை காக்க கொண்டு வரப்பட்டுள்ள அவசரச்சட்டத்தை, மருத்துவ துறையினர் வரவேற்றுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மருத்துவ துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது என்றும், அவர்கள் மீது தாக்குதல் தொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.