கட்டணம் செலுத்தும் விவகாரம் – தனியார் பள்ளிகள் & கல்லூரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்தச் சொல்லி பெற்றோர்களை நிர்பந்திக்கக் கூடாது என்று தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுத்தேர்வு பணிகள் முடிவடையாததால், அடுத்தாண்டு கல்வியாண்டு தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டில் நிலுவையில் உள்ள கல்வி மற்றும் இதர கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது. மேலும், சில பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்த கடைசி தேதி ஆகியவற்றை நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக அரசுக்கு புகார்கள் சென்ற நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிவிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஊரடங்கு காலத்தில், கல்வி மற்றும் பிற கட்டணங்களை செலுத்தக் கோரி மாணவர்களையோ, பெற்றோரையோ நிர்பந்திக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.