மே 3-ம் தேதிக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்
மே 3-ம் தேதிக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ”இன்று காலை முதலமைச்சர் தலைமையில், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் இருந்தால் மட்டும்தான் 11ம் வகுப்பில் எந்த பாடத்தை எடுக்க முடியும் என்பதை தேர்வு செய்ய முடியும். பல்வேறு படிப்புகள், டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆகியவை 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும்.
அதனால் 10ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் முடிவுகள் எடுத்தப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடைபெறும். மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீக்கப்பட்டதும் எப்படி தேர்வு நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.