மலேரியாவுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயினை மக்களுக்கு தர முடிவு..!
மலேரியாவுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை, சில மாநில அரசுகள் மக்களுக்கு நேரடியாக தர முடிவெடுத்துள்ளன.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் இன்று கொரோனாவுக்கு அடுத்தபடியாக உலக நாடுகள் அதிகம் உச்சரிக்கும் பெயராகிவிட்டது. HCQ என சுருக்கமாக அழைக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனாவுக்கு நன்கு பலன் தருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதுதான் தாமதம்.
HCQ தயாரிப்பில் உலகில் முன்னணியில் உள்ள இந்தியாவிடம் அதை கேட்டு உலக நாடுகள் வரிசை கட்டி நின்றன. இதுவரை 110 நாடுகளுக்கு HCQ மாத்திரைகளை இந்தியா அனுப்பியுள்ளது. மலேரியாவுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் இந்த HCQ உண்மையிலேயே கொரோனாவுக்கு தீர்வா என நிரூபணமாகியிருக்கிறதா என்றால் இல்லை.
இருந்தாலும் HCQ மாத்திரைகளை ராஜஸ்தான் போலீசாருக்கு வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதுபோல் கொரோனா அதிகம் பாதித்த ஹாட்ஸ்பாட் பகுதிகளில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பு நடவடிக்கையாக தர மும்பை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
எனினும் 15 வயதுக்குட்பட்டோர் இதய நோயாளிகள் மற்றும் 55 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தரப்படாது என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எதற்காக HCQ மாத்திரைகள் தரப்படவுள்ளன என்பதற்கு மும்பை மாநகராட்சி காரணம் கூறுகிறது.
தாராவி போன்ற இடங்களில் தனி மனித விலகலுக்கு சாத்தியமற்ற அறைகளில் நெருக்கமாக மக்கள் வசிப்பதால் HCQ மாத்திரைகளை வழங்கப்போவதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. எனினும் பரீட்சார்த்த முறையில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரப்வோதாக கூறப்பட்டுள்ளது.ஆனால் மத்திய அரசு நிறுவனமான ஐசிஎம்ஆர் HCQ மாத்திரைகளை தடுப்பு மருந்தாகவோ, தீர்வாகவோ இதுவரை அங்கீகரிக்கவில்லை. அதை தீவிர பாதிப்புக்கு உட்பட்டவர்களுக்கும்.கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தாருக்கும் மட்டுமே தருவதற்கு பரிந்துரைத்துள்ளது.
இதுபோல் உலக சுகாதார நிறுவனமும் கொரோனாவுக்கு HCQ முழுமையாக பலன் தருமா என ஆய்வு செய்து வருகிறது. எனினும் HCQ மாத்திரைகளை கேட்டு இந்தியாவை பல நாடுகள் நச்சரித்து வருகின்றன.
மேலும் HCQ மாத்திரை பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் சில மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சிலருக்கு சீரற்ற இதயத்துடிப்பை ஏற்படுத்திவிடும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும் HCQ மாத்திரை தயாரிப்புக்கு பயன்படும் மூலப்பொள் விலை கிலோ 9 ஆயிரம் ரூபாயில் இருந்து தற்போது 55 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதால் சிறு நிறுவனங்கள் தயாரிப்பை நிறுத்திவிட்டன.
மலேரியா மற்றும் முடக்குவாதம் போன்றவற்றுக்காக பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் HCQ கொரோனா சிகிச்சைக்கு உரியதா என்பது விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே தெரியவரும்.