குறை கூறாதீர்கள்; தீர்வு கூறுங்கள்… பரிசீலிக்கிறோம்…! மு.க ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்
சேலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 9 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியதாவது, “சேலத்தில் 24 பேர் கொரோனோ தொற்றில் பாதிக்கப்பட்டதில் 7 பேர் குணமடைந்துள்ளனர். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 98 சதவீதம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிமாநில பணியாளர்களுக்கும் 4 நாட்களில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்குள் அரசு அறிவித்த நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், சேலம் மாவட்டத்தில் 15 அம்மா உணவகத்தில் தடையின்றி உணவு விநியோகம் அளித்ததில் 2.50 லட்சம் பேர் உணவு பெற்றுள்ளதாக கூறிய முதல்வர், 150 நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சேலத்தில் 78 மளிகை கடைகள் மூலம் 23,000 நபர்களுக்கு வீடு தேடி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், ” தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிதியை யார் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை. நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முதலிடம் உள்ளது.
நோய் தாக்கத்தின் இறுதி கட்ட நிலையில் மருத்துவமனையை அனுகிய நபர்களே உயிரிழந்து வருகின்றனர். ஸ்டாலினின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசின் குறையை சுட்டிக்காட்டாமல், இந்த பிரச்சினைக்கு ஸ்டாலின் தீர்வு கூறினால் பரிசீலிக்கப்படும்.கொரோனா நோய் பரவலைத் தடுக்க தேவை அனைத்துக் கட்சி கூட்டம் அல்ல, மருத்துவர்களின் ஆலோசனை மட்டுமே. கொரோனாவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின். ஆனால் மக்களை பாதுகாப்பதே எங்களின் கடமை”இவ்வாறு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.