கொரோனா பாதித்து உயிரிழப்பவர்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் – திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம்
கொரோனாவால் உயிரிழப்போரின் குடும்பத்தினர் மற்றும் தடுப்புப் பணியின்போது உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக கூட்டணிக் கட்சியினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, மதிமுக பொதுசெயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 11 கட்சிகளின் தலைவர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, கொரோனா தாக்குதலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கொரோனா நோய்த் தடுப்புப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்களை வழங்க வேண்டும், சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
உபகரணங்கள் கொள்முதலில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் முதல்கட்டமாக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நோய்த் தடுப்புக்கான செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.