காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு நன்றி தெரிவித்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!
கொரோனா வைரஸை எதிர்கொள்ள பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அழைப்புவிடுத்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவதற்கு முன்னதாக, வீடியோ பதிவை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை தெரிவிக்கும் என்று கூறியுள்ளார்.
உறுதியான நடவடிக்கைகள் மூலம், இந்த நெருக்கடியிலிருந்து நாடு விரைவில் மீண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ள சோனியாகாந்தி, நாட்டு மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருந்து, ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சோனியாகாந்தியின் இந்த வீடியோவுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உடல்நலனை கவனத்தில் கொள்ளுமாறு சோனியா காந்தியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.