‘பில்வாரா மாடலை’ பின்பற்றும் தமிழகம்… கொரோனா பரவல் கட்டுக்குள் வருமா?
கொரோனா தொற்று சங்கிலியை உடைத்து சாதித்த ‘பில்வாரா மாடலை’ தமிழக அரசு பின்பற்றத் தொடங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் திருப்பூர்தான் பில்வாரா (Bhilwara). டெக்ஸ்டைல் நகரம் என்று அழைக்கப்படும் பில்வாராதான் அந்த மாநிலத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. பில்வாரா மாவட்டத்தில் சோதிக்கப்பட்ட 3678 பேரில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனால், நோய்ப் பரவல் சங்கிலியை மிகச் சரியாக திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் உடைத்திருக்கிறது. அதனால், 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக தொற்று யாருக்கும் பரவவில்லை.
மாவட்ட நிர்வாகம் செய்தது என்ன?
பில்வாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான மார்ச் 20ம் தேதியே அம்மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிரதமர் மோடியே இதன் பிறகுதான் நாடு முழுவதும் ஊரடங்கிற்க்கு உத்தரவிட்டார். ஒட்டுமொத்த மாவட்டமும் முழுமையாக மூடப்பட்டது. எல்லைகளை மூடி சீல் வைத்ததுடன், ஆள் நடமாட்டம் முற்றிலும் தவிர்க்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள ஏரியாக்கள், மார்க் செய்யப்பட்டு, அப்பகுதிக்குள் யாரையும் நுழையவிடாமல் தடை விதிக்கப்பட்டது.
செல்போன் டவர், கூகுள் மேப் ஆகியவற்றைக்கொண்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு வீட்டிலும் மருத்துவச் சோதனை நடத்தப்பட்டது. 25 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டதில், 1315 பேர் வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டனர்.கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்பட்டவர்களைக் கண்காணிக்க, அவர்களின் வீடுகளின் முன்பு காலவர்களை நிறுத்திய மாவட்ட நிர்வாகம், விதிகளைக் கடுமையாக்கியது.
வீட்டை விட்டு வெளியே வருபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் மிக முக்கியம், மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், பால், மருந்து ஆகியவற்றை மாவட்ட நிர்வாகமே ஒவ்வொரு வீடாக வழங்கியதுதான்.
பயண வரலாறு, கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பு ஆகியவை இன்றி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், ஹாஸ்டல்கள் ஆகியவற்றை 1,500 படுக்கைகள் கொண்ட தனி வார்டாக மாற்றப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தை திறம்பட முன்னெடுத்த பில்வாரா மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட்டுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகின்றன. பில்வாராவின் ஆட்சியர், போலீசார், மருத்துவத்துறை பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என அனைத்து தரப்பினரும் இணைந்து கொரோனா தொற்று பரவலை முழுமையாக தோற்கடித்துள்ளனர்.
பில்வாரா மாடலை அடிப்படையாகக் கொண்டுதான், தமிழகம் முழுவதும் வீடுதோறும் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில், மற்ற அம்சங்களை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.