வீட்டு உணவுக்கு அனுமதி மறுப்பு… கொரோனா வார்டில் கண்ணாடியை உடைத்து இளைஞர் ரகளை…!
வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரியாணியை சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டதால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருத்துவமனையை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் போத்தனூரை சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரை சந்திக்க வந்த அவரது மனைவி பிரியாணி சமைத்து எடுத்து வந்துள்ளார். ஆனால், வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவை சாப்பிட அனுமதிக்க முடியாது என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்,
ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையில் நேற்று வரை 86 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.