EBM News Tamil
Leading News Portal in Tamil

திமுக மீது கை வைக்கும் பாஜக.. ராஜ்யசபா எம்.பியாகும் மு.க. அழகிரி… டெல்லி டீலிங் சக்சஸ்

சென்னை: நாட்டின் பல்வேறு கட்சிகளை பதம் பார்த்த பாஜக திமுக மீது இதுவரை கை வைக்காமல் இருந்தது. இப்போது ஆபரேஷன் லோட்டஸ் அஸ்திரத்தை திமுக மீது ஏவ களமிறங்கிவிட்டதாம் பாஜக.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்பது டெல்லிக்கு தெரிந்த சங்கதிதான். இதனால்தான் தமிழக பாஜகவை தண்ணீர் தெளித்துவிட்ட பிள்ளை போல கண்டுகொள்ளாமலேயே இருந்தது டெல்லி.

தமிழகத்தில் நேரடியாக களமிறங்குவதற்கு பதில் யாரின் முதுகில் ஏறினால் அரியாசனம் கிடைக்கும் என்கிற குறுக்குவழிதான் பாஜக முன் உள்ள வாய்ப்பு. இதற்காகத்தான் மலைபோல ரஜினிகாந்தை அக்கட்சி நம்பியது. ஆனால் ரஜினிகாந்தோ இமயமலைக்குப் போவேனே தவிர அரசியலுக்கு வரமாட்டேன் என்கிற ரீதியாக நழுவிக் கொண்டே இருக்கிறார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதிமுக, திமுகவின் 2-ம் கட்ட தலைகளை வைத்து அரசியலில் ஒரு பிரளயத்தை உருவாக்கலாம்; திமுகவின் சட்டசபை தேர்தல் வெற்றியை கலைத்துப் போட்டுவிடலாம் என்பதுதான் பாஜகவின் காத்திருந்த கனவு. ஆனால் ரஜினிகாந்தின் பேச்சும் செயல்பாடுகளும் இந்த ஒட்டுமொத்த கனவுக்கும் ஆகப்பெரும் வேட்டு வைத்து கொண்டே இருப்பதால் அக்கட்சியே வெறுத்துப் போய்விட்டதாம்.

இதனால் அடுத்த அஸ்திரங்களை கையில் எடுக்க தொடங்கிவிட்டதாம் பாஜக. இதன் ஒருபகுதிதான் தற்போது திமுகவில் கே.பி. ராமலிங்கம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் சலசலப்பாம். திமுகவில் கட்சி தலைமைக்கு எதிராக கே.பி. ராமலிங்கம் போல இதுவரை அறிக்கை வெளியிட்டது இல்லை. ஏன் பிற கட்சிகளிலும் கூட அப்படி செய்வது இல்லை. கட்சி தலைமைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டால் கட்டம் கட்டுவார்கள் என்பது தெரிந்தே கே.பி. ராமலிங்கம் அறிக்கை விட்டிருக்கிறார் என்கிற போதே திட்டமிட்ட ஒன்றுதான் அரங்கேறுகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.