மிருசுவில் இனப்படுகொலையாளி விடுதலைக்கு வைகோ எதிர்ப்பு
சென்னை: ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த ராணுவ அதிகாரி சுனில் ரத்ன நாயகேவை இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே விடுதலை செய்திருப்பதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
பேரழிவு நோயாக இந்த உலகத்தையே சூழ்ந்து அரசர்கள் அதிபர்கள், சாதாரண மனிதர்கள் வரை அனைத்து நாடுகளையும் கொரோனா அச்சுறுதிக்கொண்டு இருக்கின்றது. நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்றுகின்ற உரைகளில், நாட்டைப் பற்றி எவ்வளவு ரண வேதனையும், மனத் துன்பமும் அடைந்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் கொரோனா நோய் நாடுகளை நசுக்கி, மனித உயிர்களைக் காவு கொண்டு, பொருளாதார நலிவையும் தருகிறது. 138 கோடி மக்கள் வாழ்கின்ற நம்முடைய நாட்டில் இக்கொரோனா நோயினால் ஏற்படும் விபரீதங்களை எண்ணி நான் மிகுந்த கவலைப்பட்டாலும், இந்த சோதனையான வேளையில் மக்களோடு சேர்ந்து அரசினுடைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறேன். அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தருமாறு எங்கள் கட்சித் தோழர்களை வேண்டியுள்ளேன்.
தமிழ்நாட்டில் பிரசுரமாகும் நாளேடான தினமணி பத்திரிகை இன்று ஏப்ரல் 02 ஆம் தேதி, இலங்கையில் நடப்பது குறித்து எழுதியுள்ள தலையங்கத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இலங்கையில் தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்து, கொழும்பு உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்ன நாயகேவை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுதலை செய்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி சொந்த நாட்டிலேயே அகதிகளான 7 தமிழர்களை மிகக் கொடூரமாக இலங்கை இராணுவ அதிகாரி சுனில் ரத்ன நாயகேவும் மற்றும் இலங்கை இராணுவத்தினர் 13 பேரும் படுகொலை செய்தனர்.