ஆப்பிரிக்கா நாடுகளிலும் கொரோனா தாக்குதல்- 5,000 பேருக்கு பாதிப்பு- உயிரிழப்பு 200ஐ எட்டியது
ஜோகன்ஸ்பர்க்: உலகின் வல்லரசுகளை வேட்டையாடி வரும் கொரோனா தொற்று நோய் ஏழ்மை நிறைந்து காணப்படும் ஆப்பிரிக்கா கண்டத்தையும் தாக்கி வருகிறது. தற்போதைய நிலையில் ஆப்பிரிக்கா நாடுகளில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 200ஐ எட்டுகிறது. 5,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து என பேயாட்டம் ஆண்ட கொரோனா இப்போது அமெரிக்காவை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. உலகில் அண்டார்ட்டிக்கா கண்டத்தைத் தவிர அத்தனை கண்டத்து தேசங்களையும் கொரோனா நிலைகுலைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில் பல்வேறு தொற்று நோய்களாலும் ஆட்கொல்லி நோய்களாலும் பேரழிவை எதிர்கொண்டு வரும் ஆப்பிரிக்காவையும் கொரோனா கொடூரமாக தாக்கி வருகிறது. ஆப்பிரிக்கா நாடுகளில் இதுவரை 174 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சுமார் 5000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.