EBM News Tamil
Leading News Portal in Tamil

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் முதல் பரிசு: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி ‘வாழ்த்து’

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள அகமதாபாத் கூட்டுறவு வங்கிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்று கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்களை சமூக ஆர்வலர் மனோரஞ்சன் எஸ்.ராய் ஆர்டிஐ சட்டத்தில் கோரியிருந்தார்.
இதற்கு நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சரவணவேல் அளித்த பதிலில், தேசிய அளவில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் மிக அதிகபட்சமாக குஜராத்தின் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். இந்த வங்கியின் இயக்குநராக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உங்களது (அமித் ஷா) வங்கியில் ஐந்தே நாட்களில் ரூ.745 கோடி டெபாசிட் செய்யப்பட்டு தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. அதற்காக உங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அந்த சாதனைக்கும் வணக்கம் செலுத்துகிறேன்.
அகமதாபாத் மாவட்ட வங்கியில் தாங்கள் இயக்குநராக இருக்கும்போது, பழைய ரூபாய் நோட்டுகள் அதிகம் டெபாசிட் செய்யப்பட்டு அந்த வங்கி சாதனை படைத்துள்ளது. பாஜகவின் தேசிய தலைவராக நீங்கள் இருக்கும்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு பாஜக 81% சதவீதம் அளவுக்கு பண ஆதாயம் பெற்றுள்ளது.
இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.
விசாரணை அவசியம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது: பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது குஜராத்தின் 18 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 நாட்களில் ரூ.3,118 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. அமித் ஷா இயக்குநராக உள்ள அகமதாபாத் மாவட்ட வங்கியில் அதிகபட்சமாக ரூ.745 கோடி டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து அமித் ஷாவும் பிரதமர் மோடியும் பதில் அளிக்க வேண்டும். கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நபார்டு நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், குஜராத் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 17 லட்சம் கணக்குகள் உள்ளன. இதில் 1.60 லட்சம் பேர் மட்டுமே பழைய நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளனர். இதில் பெரும்பான்மையான கணக்குகளில் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாகவே பணம் டெபாசிட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.