Ultimate magazine theme for WordPress.

யோகா எந்த மதத்துக்கும் சொந்தமல்ல; மதச்சார்பற்ற மனதுடன் செய்ய வேண்டும்: கேரள முதல்வர் பேச்சு

யோகா என்பது எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல, மதச்சார்பற்ற மனதுடன் யோகா செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று காலை பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதுபோலவே பல்வேறு மாநிலங்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையி்ல் ‘‘பல்வேறு நாடுகளில் உடலும், மனதும் சீராக செயல்பட எத்தனையோ உடல் பயிற்சிகளை செய்கின்றனர். எனினும் யோகா மனதிற்கு சிறந்த பயிற்சியாக அமைந்துள்ளது.
யோகா என்பது எந்த மதத்தையும் சார்ந்த கலை அல்ல. எந்த மத சம்பிரதாயமும் அல்ல. ஜாதி, மதம் போன்ற பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு யார் வேண்டுமானாலும் யோகா செய்ய முடியும். யோகா செய்யும் போது மதச்சார்பற்ற மனதுடன் செய்ய வேண்டும். யோகாவை மதத்தின் பெயரால் கடத்திச் செல்ல சில குழுக்கள் விரும்புகின்றன.
இதுபோன்ற மோசமான பிரச்சாரங்களால் தான், சாதாரண மக்களை யோகாவில் தனிமைப்பட்டு நிற்க வைக்கிறது. யோகாவும் தனது பெருமையை இழந்து விடுகிறது. யோகா என்பது உடலுக்கும், மனதுக்கும் சிறந்த பயிற்சியாகும். சர்வதேச தரத்தில் யோக பயற்சி அளிக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.