Ultimate magazine theme for WordPress.

பாஜகவின் பேராசையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது: சிவசேனா விளாசல்

காஷ்மீரில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பாஜகவின் பேராசைக்கு ஏராளமான விலை கொடுக்கப்பட்டுவிட்டது. பாஜகவின் பேராசையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று சிவசேனா கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த் 3 ஆண்டுகளாக மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தது. ஆனால், ஆளும் கட்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, பல்வேறு விஷயங்களில் ஏற்பட்ட முரண்பாடு ஆகியவற்றால், கூட்டணியில் இருந்து பாஜக விலகியது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளில் 4-வது முறையாக காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளது.
இது தொடர்பாக அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
’’ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பேராசையில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால், பாஜகவின் பேராசைக்கு இந்த நாடும், படைவீரர்களும், காஷ்மீர் மக்களும் சேர்ந்து மிகப்பெரிய விலையைக் கொடுத்திருக்கின்றனர். பாஜகவின் பேராசையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைத்தால், தீவிரவாதத்தை ஒழித்துவிடுவோம், வன்முறையைக் கட்டுப்படுத்திவிடுவோம் என்ற வாக்குறுதியில் கூட்டணி ஆட்சி அமைத்தது பாஜக. ஆனால், தீவிரவாதத்தையும், வன்முறையையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றவுடன் அனைத்துப் பழிகளையும் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கூட்டணியின் மீது சுமத்திவிட்டு ஆட்சியில் இருந்து பாஜக வெளியேறிவிட்டது.
இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், அனைத்து வளங்களையும் சுரண்டிவிட்டு வெளியேறியதுபோல் பாஜக ஏராளமான அராஜகங்களையும், அட்டூழியங்களையும் செய்து வெளியேறிவிட்டது.
ஜம்மு காஷ்மீரில் இதற்குமுன் நிலை இப்போதுள்ள அளவுக்கு மோசமாக இருந்தது இல்லை, ரத்தஆறுகள் ஓடவில்லை, இந்த அளவுக்கு இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளால் கொல்லப்படவில்லை. பாஜக ஆட்சியில் அமர்ந்த பின்புதான் நிலைமை மோசமானது.
பாஜக ஆட்சியில் இருந்து வெளியேறவுடன், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பாஜகதான் காரணம் என்று கூறிவிட்டு, மெகபூபா முப்தியும் ராஜினாமா செய்தார். பிரதமர் மோடியும், அவர் சார்ந்திருக்கும் பாஜகவும் காஷ்மீரில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம் என்று மக்களிடம் உறுதியளித்துதான் ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால், இன்று மக்கள் இதற்கு முன் காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே பரவாயில்லை என்ற ரீதியில் அங்குள்ள மக்கள் நினைக்கின்றனர். இன்று காஷ்மீர் மக்கள் ராணுவத்தினரைத் தாக்குகிறார்கள், ராணுவ முகாம்களைத் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள், நாள்தோறும் நமது வீரர்கள் வீர மரணம் எய்துகிறார்கள், அப்பாவி மக்கள் நாள்தோறும் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியாகிறார்கள்.
நாட்டை ஆள்வது என்பதைப் பிரதமர் மோடி சிறுபிள்ளை விளையாட்டு போல் நினைத்துக் கொண்டிருக்கிறார். நமது பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், காஷ்மீரில் மக்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை அளித்துள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தபின் தீவிரவாதம் ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினர், தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. எந்தவிதான போரும் நடைபெறாத சூழலில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைவது அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தவறியபோது, முடியாத போது பாஜக, பிடிபி கட்சி மீது பழிசுமத்துகிறது.
ஜம்மு காஷ்மீரில் ஆட்சிக்கு வரும் போது, அங்குப் பாரம்பரியமாக வாழ்ந்த பண்டிட்களை மீண்டும் அமரவைப்போம், அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவான காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்வோம் என்று பாஜக உறுதியளித்தது. அவை என்னாயிற்று?’’
இவ்வாறு சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.