அணுஆயுத சோதனைப் பிரச்சினைக்கு தீர்வு: கிம் – ஜி ஜின்பிங் உறுதி
அணுஆயுத சோதனை போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கிம் – ஜி ஜின்பிங் ஆகியோர் உறுதி கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான சிங்கப்பூர் உச்சி மாநாட்டுச் சந்திப்புக்குப் பிறகு வடகொரிய அதிபர் கிம் செவ்வாய்க்கிழமை சீனா சென்றடைந்தார். இந்தச் சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டார் கிம்.
இந்தச் சந்திப்பு குறித்து சீனா தரப்பில், ”வடகொரிய அதிபர் கிம்மின் இந்த சந்திப்பு இரு நாடுகளுடனான உறவை ஆழப்படுத்த உதவும். மேலும் இரு நாடுகளுக்கிடையேயான பிராந்தியத்தில் அமைதி ஏற்பட உதவும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கிம் – ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பில் அணுஆயுத சோதனை உட்பட பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து சினுவா வெளியிட்ட செய்தியில், “கொரிய பிராந்தியத்தில் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு உண்மையான சமாதானம் உருவாகி வருகிறது” என்று கூறியுள்ளது.
பல வார்த்தை மோதல்களுக்குப் பின்னர், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம்மும் ஜுன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் கேபெல்லா ஓட்டலில் நடந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அணுஆயுதங்களையும், அதன் சோதனை கூடங்களை அழிப்பதாக கிம் சம்மதம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா – வடகொரியா கொரிய தீப கற்ப எல்லையில் ஆகஸ்ட் மாதம் திட்டமிட்டிருந்த ராணுவ கூட்டுப் பயிற்சியைக் கைவிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.