காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் தமிழகத்துக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: முழு கொள்ளளவை எட்டியது கபினி அணை
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணை யில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. காவிரியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தலக்காவிரியில் 195.8 மில்லி மீட்டர், பாகமண்டலாவில் 170.45 மில்லி மீட்டர், மடிகேரியில் 112.60 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது.
குடகு மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கொட்டி தீர்க்கும் கனமழையால் மடிகேரி – தலக்காவிரி இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடகு, மைசூரு ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளில் தொடரும் மழையால் மைசூரு மாவட்டத் தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 94.53 அடி யாக (மொத்த கொள்ளளவு 124.80 அடி) உயர்ந்திருக்கிறது. அணைக்கு விநாடிக்கு 28,096 கன அடிநீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 416 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 67.60 அடி யாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வேகமாக நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடகு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரத் தில் உள்ள ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,827.0 அடியாக உயர்ந்திருக்கிறது. இந்த அணைக்கு விநாடிக்கு 5,145 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 30 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2,922 அடி உயரத்தில் உள்ள ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2893.16 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 19,242 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 200 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கபினி நிரம்பியது
மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று பிற்பகலில் 2281.50 அடியாக அதிகரித்தது. அப்போது அணைக்கு விநாடிக்கு 36,650 கனஅடி நீர் வந்து கொண்டிருந்ததால், காலையில் நீர் திறப்பு வீதம் விநாடிக்கு 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. பின்னர் மாலையில் அணையின் பாதுகாப்பு கருதி 36,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட் டுள்ளது.
இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரத்தில் உள்ள மைசூரு, ராம்நகர், கனகபுரா, சங்கமா, மேக்கேதாட்டு (ஆடு தாண்டும் காவிரி) ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர் ஒகேனக்கல் மூலம் விரைவில் மேட்டூர் அணைக்கு வந்தடையும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் கபினி அணையின் நீர்மட்டம் 2,249.30 அடியாக இருந்த நிலையில், நிகழாண்டில் 2281.50 அடியாக உயர்ந்திருப்பதால் மைசூரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கபினி அணியை பொறுத்தவரை முழு கொள்ளளவு 2284 அடியாக இருப்பினும், அதிகப்பட்சம் 2282.50 அடி அளவுக்கே நீர் தேக்கப்படும். 2 அடி குறைவாக இருக்கும் போதே முழு கொள்ளளவை எட்டியதாக அறிவிக்கப்பட்டு, முதல்வர் உள்ளிட்டோர் பூமி சமர்ப்பண பூஜை செய் வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்திலே வயநாட்டில் கனமழை பெய்ததால் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு, பூமி சமர்ப்பண பூஜை நடத்தும் நாளை அறிவிக்கவில்லை. முதல்வர் குமாரசாமி நேற்று மதுரை சென்றதால், இது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. முதல்வர் அறிவிப்புக்கு பிறகே கபினி அணை நிரம்பியது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் கேஆர்எஸ், ஹாரங்கி, ஹேமாவதி அணைகளும் நிரம்பி வருகின்றன. பருவமழை இன் னும் 15 நாட்களுக்கு நீடித்தால் ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளும் நிரம்பும். இதனால் இருமாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.