EBM News Tamil
Leading News Portal in Tamil

பிரபாகரன் பெயர் சர்ச்சை – துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கோரிய பிரசன்னா

பிரபாகரன் பெயர் சர்ச்சை விவகாரத்தில் நடிகர் துல்கர் சல்மானிடம் பிரசன்னா மன்னிப்பு கோரியுள்ளார்.

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான், சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடித்து பிப்ரவரி மாதம் வெளியான படம் ‘வரனே அவஸ்யமுண்டு’. இந்தப் படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சியில் நாயை பிரபாகரன் என்று அழைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்துவது போல இந்தக் காட்சி அமைந்திருப்பதாக துல்கர் சல்மான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்தநிலையில், அந்தக் காட்சிக்கு துல்கர் சல்மான் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், “ ‘வரனே அவஸ்யமுண்டு’ படத்திலுள்ள பிரபாகரன் நகைச்சுவைக் காட்சி தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று பலரும் என்னுடைய கவனத்துக்கு கொண்டுவந்தனர். இந்தக் காட்சி உள்நோக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது அல்ல. அந்த நகைச்சுவைக் காட்சி பழைய மலையாளப் படமான பட்டண பிரவேஷம் படத்தைக் குறிப்பிடும் காட்சி.

இது கேரளாவில் மிகவும் பிரபலமான மீம். பிரபாகரன் என்பது கேரளாவில் மிகவும் இயல்பான பெயர். அதனால், படத்தில் தொடக்கத்தில் போடப்பட்ட அறிவிப்பின்படி, அந்தப் பெயர் உயிருடன் உள்ளவரையோ அல்லது மறைந்த நபரையோ குறிப்பிடப்படவில்லை. இந்தப் படத்தைப் பார்க்காமல் பலர் இதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். வெறுப்பை பரப்ப முயற்சிக்கிறார்கள். என்னை வெறுப்பதோ அல்லது என்னுடைய இயக்குநர் அனூப்பை வெறுப்பதையோ நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதை எங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

எங்களுடைய தந்தைகளை திட்டுவதோ அல்லது படத்தில் நடித்த மூத்த நடிகர்களைத் திட்டுவதோ வேண்டாம். அந்தக் காட்சியால் காயம்பட்ட நல்ல மற்றும் அன்பான தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய படத்தின் மூலமோ என்னுடைய வார்த்தைகளின் மூலமோ யார் குறித்தும் அவதூறு பரப்ப வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. இது தவறான புரிதலின் விளைவு’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழக மக்களிடம் துல்கர் சல்மான் இப்படி மன்னிப்புக் கேட்க, அவரிடம் நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது. அன்பார்ந்தவர்களே, அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளார்.மேலும், துல்கர் சல்மான் வெளியிட்ட ட்வீட்டைக் குறிப்பிட்டு “மலையாள திரைப்படங்களைப் பார்த்திருக்கும் ஒரு தமிழனாக, அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பது எனக்குப் புரிகிறது. தேவையில்லாத அவதூறுக்கும், தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர்” என்று பிரசன்னா கூறியுள்ளார். இதற்கு துல்கர் சல்மானும் நன்றி தெரிவித்துள்ளார்.