Ultimate magazine theme for WordPress.

மூடிக்கிடக்கும் திரையரங்குகளுக்கு வந்த புதிய சிக்கல்: ஒரு மாதத்தில் சுமார் ரூ.800 கோடி வர்த்தகம் பாதி

ஊரடங்கு உத்தரவால் முடங்கி இருக்கும் தொழில்களில் சினிமா வர்த்தகமும் பிரதான இடத்தைப் பிடிக்கிறது. இதன் காரணமாக தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் நாளுக்கு நாள் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் கழுத்தை நெறித்து வருகிறது.

கோலாகலமாக விழாக்கோலம் பூண்டிருந்த திரையரங்குகள் பூட்டப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. தினமும் ஒரு படம் தியேட்டருக்கு சென்று பார்க்கும் பழக்கம் கொண்டிருந்த ரசிகர்கள் கூட தற்போது திரையரங்கம் என்ற ஒன்றை மறந்து இயல்பாக தங்களது வாழ்வை நகர்த்தத் தொடங்கிவிட்டனர்.

இனி திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வழக்கம் போல் ரசிகர்கள் கூட்டம் படையெடுக்குமா என்ற சந்தேகத்துடனேயே தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் உள்ளனர்.

கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட முப்பது முதல் நாற்பது படங்கள் இந்த ஒரு மாதத்தில் திரைக்கு வந்திருக்கும். திரைப்படங்களின் ரிலீஸ் மற்றும் அதன் வர்த்தகத்தின் மூலம் சுமார் சுமார் 500 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்திருக்கும்.

திரையரங்குகளில் பாப்கார்ன், குளிர்பானங்கள் உள்ளிட்ட திண்பண்டங்கள் மூலம் 150 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகியிருக்கும்,, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் 150 கோடி என இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 800 கோடி ரூபாய் திரைத்துறையில் புழங்கியிருக்கும். அதன் மூலமாக அரசுக்கு கேளிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரியாக கணிசமான தொகை கிடைத்திருக்கும். ஆனால் தற்போது இவை அனைத்துமே முடங்கிப் போய்விட்டது.

தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு இப்படி இருக்க, திரையரங்க உரிமையாளர்கள் புதுவிதமான சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். ஒருமாதமாக பூட்டிக் கிடக்கும் திரையரங்குகளில் எலிகள் ஊருடுவி இருக்கைகள், கேபிள்களை நாசம் செய்ததால் கூடுதல் இழப்பை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.திரையரங்க பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடங்கி மின்கட்டணம் வரை அனைத்து செலவுகளையும் எந்த ஒரு வருமானமும் இன்றி செய்யும் சூழலுக்கு திரையரங்க உரிமையாளர்கள் ஆளாகி உள்ளனர். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் மீண்டும் திரையரங்குகளை புதுப்பித்து திரைப்படங்களை ஓட்ட முடியுமா என்பது சந்தேகமே என்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெற்றாலும் திரைத்துறை மீண்டும் உயிர் பெற்று பழைய நிலைக்கு திரும்ப இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என திரைத் துறை வல்லுநர்கள் கணிக்கின்றனர். பணமதிப்பிழப்பு பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாத சூழலில், கொரோனா வைரஸ் தங்களை ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.