EBM News Tamil
Leading News Portal in Tamil

அலசல்: டானாக டானில்லை தாயே!

டான் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அறிஞர், பண்டிதர் ஆகிய அர்த்தங்களையும் அகராதிகள் தருகின்றன. அதன் லத்தீன் வேர்ச்சொல் ‘டாமினோஸ்’. அது குரு, தலைவர் ஆகிய அர்த்தங்களைப் பட்டியலிடுகிறது. ஆங்கிலப் படங்களின் வழியாகவே வெவ்வேறு தொழில் செய்பவர்கள், அவர்களது தொழில்முறை ஆடையலங்காரம், பாத்திரப் படைப்புகள் ஆகியவற்றுக்கான தாக்கத்தை தமிழ்சினிமா பெற்றுக்கொண்டு வளர்ந்திருக்கிறது.
உதாரணமாக 40-களில் வெளியான ‘சபாபதி’, ‘நல்ல தம்பி’ ஆகிய படங்களில் கோட்டும் சூட்டும் வர, பிற்காலங்களில் சிஐடி கதாபாத்திரங்களில் வருபவருக்கும் இதேபோல பிரத்தியேக கோட், சூட் மற்றும் தொப்பி என சர்வசாதாரணமாகத் தமிழ்நாட்டின் தட்பவெட்பத்துக்கு ஒத்துப்போகாத ஆடைகள் வம்படியான ஆடை ‘காப்பி’காளாக இடம்பிடித்தன. உதாரணத்துக்கு ‘அந்த நாள்’ படத்தின் சிஐடி கதாபாத்திரத்தைக் கூறலாம்.
தாதாக்களின் உலகம்
தமிழ்சினிமாவில் நான் பார்த்த வகையில் முதன்முதலாக நிழல் உருவமாகக் காண்பிக்கப்படும் நிழலுலகத் தலைவனின் பிம்பம் கட்டமைக்கப்பட்டது கவியரசு கண்ணதாசன் நடித்த ‘கறுப்புப் பணம்’ என்ற படத்தில். இதில் வள்ளல் தணிகாசலமாக கவியரசு கண்ணதாசன் ‘டான்’ என்னும் நிஜவார்த்தைக்கு நெருக்கமாகக் கல்வியாளராகவும் அவரே கொள்ளையடித்து நல்லது செய்யும் நிழலுலகத் தலைவனாகவும் தோன்றியிருக்கிறார்.
அதேபோல் சிறந்த குணச்சித்திர நடிகரான எஸ்.வி.சுப்பையா நிழலுலகத் தலைவனாகத் தோன்றிய படம் எம்.ஜி.ஆர் அப்பாவி வேடத்தில் நடித்த ‘பணத்தோட்டம்’.
பின்னர் 60-களில் ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் வரிசைப் படங்கள் வெளிவரத் தொடங்கியபோது எஸ்.பாலச்சந்தர் படங்களிலும் (பொம்மை, நடு இரவில்), துப்பறியும் படங்களுக்குப் புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வல்லவனுக்கு வல்லவன்’ தொடங்கி இன்றுவரையுலுமாக நிழலுலகத் தலைவர்கள் குறித்த பிம்பங்கள் கட்டமைக்கப்படும்விதம் காலம்தோறும் மாறிக்கொண்டே வந்திருந்தாலும் அது தொடர்கிறது.
நிழல் உருவங்கள், வினோதமான குகைகளில் வசிப்பது, நவீன தொழில்நுட்பத்தில் டானின் இருப்பிடம் இயங்குவது, விமானத்தின் விமானிகளின் அறையில் இருப்பது போல விதவிதமான வண்ண விளக்குகள் வைத்த பேனல்போர்டு இருப்பது, வண்ண வண்ண மின்விளக்குகளும் குறிப்பாக, சிவப்புநிற விளக்குகள் மின்னி மின்னி எரிவது, ரகசிய பாதாள அறைக்குள் இயங்குவது, முடிந்தால் ஒரு பூனையைக் கையில் வைத்திருப்பது, முதலைகள் நிறைந்த குளத்தின் பின்னே மேடையில் இருப்பது, விஞ்ஞானிகளைக் கடத்தி வைத்திருப்பது, அரைகுறை ஆடைகளில் பெண்கள் உதவியாளர்களாக இருப்பது என நிழலுலகத் தலைவரின் மறைவிடம் மற்றும் அவர்களது வாழ்வியல் குறித்த பிம்பங்கள் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இந்தச் சித்தரிப்பானது பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர் காலங்களில் பல மாறுதல்களைச் சந்தித்து வந்திருக்கிறது.
ஹாலிவுட், பாலிவுட் தாக்கங்கள்
இதனிடையில் ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சஸியின் நிழலுலகப் படங்கள் மற்றும் டான் படங்களின் முன்மாதிரிப் பல்கலைக் கழகம் என வருணிக்கப்படும் ‘காட்ஃபாதர்’ வரிசைப் படங்களின் வருகையும் தமிழ் உட்பட பன்னாட்டு வெகுஜன சினிமாக்களில் தாக்கங்களை உருவாக்கின. ஆனால், இந்தத் தாக்கங்கள் இல்லாமல், சலீம்-ஜாவேத் கதாசிரியர்களின் திரைக்கதையில் 1978-ல் இந்தியில் வெளியானது ‘டான்’.
இந்தப் படத்தின் மூலம் துரோகம், நட்பு, ஆள்மாறாட்டம், பிறந்தநாள் கொண்டாட்டம், உளவு பார்த்தல், ரகசிய டைரி என மாறுதல்களோடு இந்தியாவின் டான் சினிமா இங்குள்ள பிராந்திய மொழிகளில் தாக்கத்தை உருவாக்கியது. அந்தப் படத்தின் மறு ஆக்கமான ‘பில்லா’வில் தொடங்கி ‘கர்ஜனை’, ‘குரு’ எனப் பல்வேறு படங்களில் அதன் தாக்கம் பரவியது.
மணிரத்னத்தின் பாணி
எல்லா பிம்பமும் ஒருநாள் உடைந்துபோகும் என்பதன் சாட்சியாக நிழலுலகத் தலைவர்களின் திரை பிம்பங்களைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டு கட்டுடைத்தவர் மணிரத்னம். நெற்றியில் குங்குமக் கீற்று, கதர் வேட்டி, சட்டை, அதிக உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் பேத்தியைக் கொஞ்சும் தேவராஜன் என்கிற பெரியவரின் கதாபாத்திரம் ‘பகல் நில’வில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதன் நீட்சியாகவே புறா வளர்க்கும் வேலு நாயக்கரும் (நாயகன்), “நீ தங்கம் தம்பி.. நல்லாயிரு” எனப் பேசும் சிதம்பரமும் (அக்னி நட்சத்திரம்), “வரும்.. கொஞ்சம் கொஞ்சமா வரும்” என்னும் அருமைநாயகம் அண்ணாச்சியும் (சத்ரியன்), “உங்களுக்கு என்ன வேணும்” என வேட்டி சட்டையில் கலெக்டரிடம் பொருமும் மற்றுமொரு தேவராஜன் (தளபதி) எனப் புதிய அணுகுமுறையை அமைதியாகத் தொடங்கி வைத்தார் மணிரத்னம்.
இது, ரஜினியின் எல்லாப் படங்களையும் மிஞ்சிய ‘பாட்ஷா’, கமல்ஹாசனின் ‘சத்யா’வில் தொடர்ந்து இழையோடி, 2000-க்குப் பிறகான ‘புதுப்பேட்டை’, மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, விஷ்ணுவர்த்தனின் ‘பட்டியல்’ வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ ஆகிய படங்களில் இன்னும் தீவிரமாகவும் நிழலுலகுக்கு நெருக்கமான சித்தரிப்புகளாகவும் இருந்தன. இதன் உச்சபட்ச சித்தரிப்பு எனில் ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் சிங்கபெருமாளும் அதே படத்தில் வரும் கஜேந்திரனும்தான்.
இது தவிர, வசந்த் இயக்கிய ‘அப்பு’வில் திருநங்கை மகாராணியாக பிரகாஷ்ராஜும், சிரிப்பு டானாக ‘மரகத நாணயம்’, ‘நானும் ரவுடிதான்’ படங்களின் ஆனந்தராஜும் பயமூட்டுவதற்குப் பதிலாக சிரிக்க வைத்தனர். ஆனால், எந்த வகையிலும் சேராமல் தன்னையே கேலிசெய்துகொள்ளும் ‘ஜுங்கா’ என தமிழ் சினிமா டானின் வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.