EBM News Tamil
Leading News Portal in Tamil

புழல் சிறையில் பயங்கரம்; ஹாலிவுட் படப் பாணியில் பிரபல தாதா கொலை: சக கைதிகள் வெறிச்செயல்

புழல் சிறைக்குள் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடியை ஹாலிவுட் பட பாணியில் சக கைதிகளே கழுத்தை அறுத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் மத்திய சிறைக்குள் பாக்ஸர் வடிவேலு உயிரிழந்ததால் நடந்த கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டது பழைய வரலாறு. தற்போது இன்னொரு பாக்ஸரும், கைதியுமான பாக்ஸர் முரளி சக கைதிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மல்லி காலனியைச் சேர்ந்தவர் முரளி என்கிற பாக்ஸர் முரளி (31). கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர், மாதவரம் ஆகிய காவல் நிலையங்களில் 16 வழக்குகள் உள்ளன.
கடந்த ஆண்டு அரிவாளால் கேக் வெட்டி பிரபலமான ரவுடி பினு கைது செய்யப்பட்டபோது, சென்னையில் ஒரே இடத்தில் இவ்வளவு ரவுடிகள் எப்படி குவிந்தார்கள் என்ற சர்ச்சை எழுந்தது. இதையடுத்து சென்னை முழுவதும் ரவுடிகள் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
சென்னை முழுவதும் போலீஸார் சோதனை நடத்தி ‘ஏ’ கிரேடில் இருந்த பல ரவுடிகளை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அப்போது ஆயுதங்கள் சுற்றியதாக பாக்ஸர் முரளியை வியாசர்பாடி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த பாக்ஸர் முரளி, பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் விசாரணைக் கைதிகள் பிரிவில் இருந்த முரளியை, தண்டனைக் கைதிகள் பிரிவுக்கு போலீஸார் மாற்றினர்.
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ரவுடியாக இருந்த நாகேந்திரன் என்பவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்று, புழலில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்தார். நாகேந்திரனுக்கும், பாக்ஸர் முரளிக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இதனால் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி சிறைக்குள்ளேயே மோதலில் ஈடுபட்டு வந்தனர். பாக்ஸர் முரளி வெளியில் இருந்தபோது அடிக்கடி அவர்கள் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். நாகேந்திரனை சிறையிலேயே கொலை செய்வதற்காக பாக்ஸர் முரளி பலமுறை முயற்சி செய்துள்ளார். நாகேந்திரனும் சிறையில் இருந்து கொண்டே, வெளியே இருக்கும் தனது கூட்டாளிகள் மூலம் பாக்ஸர் முரளியைக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சி செய்த நிலையில், நாகேந்திரன் – முரளி இருவரும் சிறையில் ஒரே இடத்தில் அடைக்கப்பட, அங்கேயும் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதைக் கண்காணிக்க வேண்டிய சிறைத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததன் விளைவு சிறைக்குள்ளேயே கொலை நடந்துள்ளது.
புழல் சிறையில் இன்று கைதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து கைதிகளும் அவரவர் அறைகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கழிவறை பக்கமாகச் சென்று கொண்டிருந்த பாக்ஸர் முரளியை, சக கைதிகளான சரண்ராஜ், ஜோசப், ரமேஷ், கார்த்தி, பிரதீப் குமார் ஆகிய 5 பேரும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர்.
பின்னர் கழிவறையில் தயாராக வைத்திருந்த தகரத்தை எடுத்து, முரளியின் கழுத்தையும், பிறப்புறுப்பையும் அறுத்தனர். உடனே சக கைதிகள் சத்தம்போடவே, சிறைக்காவலர்கள் விரைந்து வந்து, முரளியை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முரளியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சிறைக்குள்ளே கைதி சக கைதிகளால் கொல்லப்பட்டது குறித்து புழல் சிறைச்சாலை ஜெயிலர் அளித்த புகாரின்பேரில், புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புழல் போலீஸார் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினர், கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் கைப்பற்றினர். அங்கிருந்த கைதிகளிடம் விசாரணையும் நடத்தினர்.
கொலை நடந்தது எப்படி?
ஹாலிவுட் படங்களில் சிறைக்குள்ளே கொலை நடக்கும் காட்சிகளைப் பார்த்திருக்கலாம். அது போன்று கொலை செய்ய நன்கு திட்டமிட்டு, அதற்கான ஆயுதத்தையும் அங்கேயே தயாரித்து பின்னர் அதை ஒரு இடத்தில் ஒளித்து வைத்து திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர்.
பாக்ஸ்ர் முரளி வலுவானவர் என்பதால் அவரை எளிதில் வீழ்த்த முடியாது என்பதால் ஐந்து பேர் சேர்ந்து தாக்குவது என்று முடிவு செய்துள்ளனர். பாக்ஸர் முரளியைக் கொலை செய்ய சிறைச்சாலை கழிவறையின் மேற்கூறையில் இருந்த தகரத்தை எடுத்து அதைக் கூர்மையாக மாற்றி, கழிவறையிலேயே மறைத்து வைத்துள்ளனர்.
காலை உணவுக்குப் பின் முரளி கழிவறை அருகே சென்றபோது, 5 பேரும் பின் தொடர்ந்து சென்று முரளியைத் தாக்கி நிலைகுலையச் செய்து, பின்னர் 4 பேர் முரளியை பிடித்துக்கொள்ள ஒருவர் மட்டும் முரளியின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் பிறப்புறுப்பையும் அறுத்துள்ளனர். சரியாக திட்டமிட்டு கொலையை நடத்தி முடித்துள்ளனர்.
கொலை செய்த கைதிகளான சரண்ராஜ், ஜோசப், ரமேஷ், கார்த்தி, பிரதீப் குமார் ஆகிய 5 பேரும் நாகேந்திரனின் கூட்டாளிகள். எனவே, நாகேந்திரன் தூண்டுதல் பேரில்தான் முரளி கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கருதுகின்றனர்.
கொலை செய்த ஆயுதம் கிடைக்காததால் மேற்சொன்ன ஆயுதம் அல்லது கூர்மையான கத்தி போன்ற பிளேடைப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகின்றனர். பாக்ஸ்ர் முரளியும், நாகேந்திரனின் கூட்டாளிகளும் எதிரெதிர் கோஷ்டி என தெரிந்தும் இரு தரப்பையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்தது ஏன்?, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் எச்சரித்த பின்னரும் கைதிகளை இடம் மாற்றாதது ஏன்? போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, டிஐஜி முருகேசன் ஆகியோர் கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு பணியிலிருந்த சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலையில் அஜாக்கிரதையாக இருந்ததாக சில அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.