புதிய ஆதாரம் வெளியானது.. அசூர வேகத்தில் வளரும் சுஸுகி.. போட்டி நிறுவனங்கள் கலக்கம்
சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் அசூர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டின் மூலம் இது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 2018ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான, சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SMIPL) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் கடந்த ஜூலை மாதம், உள்நாட்டில் (Domestic) மட்டும் 53,321 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் உள்நாட்டில், 34,038 டூவீலர்களை மட்டுமே சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன்மூலம் 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், சுஸுகி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 56.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஒட்டுமொத்தமாக 58,805 (Domestic + Exports) டூவீலர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இந்த வகையில் பார்த்தாலும், சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் 47.1 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதுதவிர கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதல் முதல் ஜூலை மாதம் வரை ஒட்டுமொத்தமாக 2,28,908 டூவீலர்களை சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 37.5 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம், விற்பனையில் வெகுவாக முன்னேறி கொண்டிருப்பது, போட்டிய நிறுவனங்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர், கடந்த ஜூலை 19ம் தேதி இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது.
லான்ச் செய்யப்பட்ட முதல் 12 நாட்களில் (ஜூலை 30 வரை), 11,000க்கு மேற்பட்ட பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்களை சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. டிவிஎஸ் என்டார்க் 125, ஹோண்டா க்ரேஸியா 125 ஸ்கூட்டர்கள்தான், சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள். இந்திய வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக ஆதரவின் காரணமாக, சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டருக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால், டிவிஎஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இதனிடையே பண்டிகை காலத்திற்கு முன்னதாக, வி-ஸ்டிரோம் 650 (V-Strom 650) அட்வென்ஜர் டூரர் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் லான்ச் செய்ய, சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், வி-ஸ்டிரோம் 650 மோட்டார் சைக்கிளை சுஸுகி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. கவாஸாகி வெர்ஸஸ் 650, பென்னலி டிஎன்டி 600 ஜிடி உள்ளிட்ட பைக்குகளுடன் இது நேரடியாக போட்டியிடும். இதனிடையே விற்பனையில் சாதனை படைத்து வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம், ”உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை இந்திய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக வழங்குவதே தங்களின் நோக்கம் என” கூறியுள்ளது.