EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்..!

கோவையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 300க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் இரண்டு மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது திங்களன்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் இருந்த உணவக ஊழியர்கள் பணியாற்ற மறுப்பு தெரிவித்து அச்சப்படவே, உணவகத்தை மூடியுள்ளனர். இதனால் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் திங்களன்று இரவு தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட உப்புமா, மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

மறுநாள் தரமான உணவு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், காலை மற்றும் மதியமும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தரமற்ற உணவை வழங்கியதாக தெரிகிறது. இதனால் மருத்துவர்கள் சிலர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகத்திலேயே தரமான உணவை சமைத்து வழங்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கே தரமான உணவு கிடைக்காத நிலை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.